டேராடூன் ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-கோவை கலெக்டர் சமீரன் அறிவுறுத்தல்.!

கோவை: டேராடூன் ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டேராடூன் ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 2023-ம் ஆண்டுக்கான 8 -ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 3-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் பதினொன்றரை வயது நிரம்பியவராகவும் 13 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். அதாவது 2010 ஜூலை 2-ந் தேதி முதல் 2012 ஜனவரி 1-ந் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு ஏதும் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கும் போது அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி டேராடூன், உத்தரகண்ட் 248 003 என்ற முகவரிக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். பொது பிரிவினருக்கு ரூ. 600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ஜாதிச்சான்றுடன் ரூ.555க்கான கேட்பு காசோலை அனுப்பியும் அல்லது இணையம் மூலமாகவும் விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், டி.என்.பி.எஸ்.சி சாலை, பூங்கா நகர் சென்னை – 600 003 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபா் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.