சொத்து தகராறில் கொடூரம்… 40 வயது பெண் 2 நாட்களாக கூட்டு பலாத்காரம்.. நிர்பயா பாணியில் டெல்லியில் மற்றொரு கோர சம்பவம்..

டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 2 நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தற்போது ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2012ம் ஆண்டு டெல்லியில் பேருந்து ஒன்றில் ஆண் நண்பரோடு தனியாக சிக்கிய நிர்பயா (புனைவு பெயர்) என்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது, மற்றும் எதிர்த்தபோது கடுமையாக தாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூறும் வகையில் கொடூரமாக மறுபடி ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று முன்தினம்  இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி காசியாபாத் காவல்துறையினருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. காசியாபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாலை ஒன்றில் பெண் ஒருவர் மோசமான நிலையில் விழுந்து கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த காவல்துறையின் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்கையில், கடந்த 2 நாட்களாக அப்பெண் 5 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இந்த 5 பேரையும் தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே தனக்கும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு கூட அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று அப்பெண் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று மாலை பெண்ணின் சகோதரர் பேருந்து நிலையத்தில் அப்பெண்ணை இறக்கிவிட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் அப்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 2 நாட்கள் வரை அப்பெண்ணை கொடுமை படுத்திய அவர்கள் அதன் பின்னர் சாலையில் அப்பெண்ணை வீசியெறிந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதில் குற்றம்சாட்டப்பட்ட தீனு, ஷாருக், ஜாவேத், தோலா மற்றும் ஔரங்கசீப் ஆகியோரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி செருகப்பட்டுள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் இதனை மறுத்துள்ளனர்.