தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
கட்சியின் தலைவர் விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக மிக அதிக எண்ணிக்கையிலான தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியாகியுள்ள ஆதாரங்களின்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக, ஜூன் 18, தேதிக்கு முன்னதாக உயர் நீதிமன்றப் பதிவகத்தில் சுமார் 55 தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியைப் பொறுத்தவரை, மனுக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருப்பினும், புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியில் 850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ வி. கார்த்திகேயன் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் ஓம்சக்தி சேகர் தாக்கல் செய்த மனுவைத் தவிர, மற்ற மனுக்கள் கோப்புக்கு எடுக்கப்பட்டு எண் வழங்கப்படவில்லை.
1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1967 ஆம் ஆண்டின் சென்னை உயர் நீதிமன்ற (தேர்தல் மனுக்கள்) விதிகளின்படி, தேர்தல் மனுக்களுக்கு எண் வழங்கப்படுவதற்கு முன்பு அவை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 45 நாட்களுக்குள், மனுதாரர்கள் நேரில் வந்து இந்த வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதியாகும்.
தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் அல்லது அந்தந்தத் தொகுதி வாக்காளர்கள் கூட இந்தத் தேர்தல் மனுக்களைத் தாக்கல் செய்யலாம். இந்த முறை, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 2 வாக்காளர்கள், விஜய்யின் வெற்றியை எதிர்த்து தனித்தனியாக தேர்தல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். முதலமைச்சருக்கு ஆதரவாகப் பதிவான 1,20,365 வாக்குகளுக்கு எதிராக, 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் ஆர்.டி. சேகர் தாக்கல் செய்த தேர்தல் மனுவுடன், வியாசர்பாடியைச் சேர்ந்த எஸ்.தினேஷ் மற்றும் கொடுங்கையூரைச் சேர்ந்த டி.என். லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பெரம்பூர் தவிர, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்ற விஜய், தேர்தல் முடிவுக்கு பிறகு அந்த தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதியில் 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் எஸ். இனிகோ இருதயராஜும் ஒரு தேர்தல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் முறைகேடுகள் செய்தது, வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் முக்கியத் தகவல்களை மறைத்தது மற்றும் பெரியவர்களைத் தங்களுக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்துவதற்காகக் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற பல காரணங்களை முன்வைத்து, இருதயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தோல்வியடைந்த வேட்பாளர் பி. மிலானி, வழக்கு தொடர்ந்துள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்து திமுக தோல்வியடைந்த வேட்பாளர் கார்த்திக் மோகன் ஒரு மனுவையும், வாக்காளர் ஆர். சிவராஜ் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.பிரபு மனு தாக்கல் செய்துள்ளார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் என்.மரிய வில்சன் ஆகியோரின் வெற்றியை எதிர்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவெறும்பூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ விஜயகுமார் என்கிற நவல்பட்டு எஸ்.விஜி வெற்றியடைந்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க எம்.எல்.ஏ வி.முத்துராஜா 1,867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து த.வெ.க வேட்பாளர் கே.எம். ஷெரிப் மனு தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க எம்.எல்.ஏ லீமாரோஸ் மார்ட்டின் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து மற்றொரு தேர்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தி.மு.க வேட்பாளர் டி.பாரிவள்ளல் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் அனைத்திற்கும் எண் வழங்கப்பட்ட பிறகு, அவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு, தனித்தனி நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும். தேர்தல் மனுக்கள் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு, அவர்கள் விசாரணையைத் தொடங்குவதற்கு முன் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுவார்கள். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பிறர் உட்பட அனைத்து சாட்சிகளும் சாட்சிக் கூண்டில் ஏறி பிரமாணத்தின் அடிப்படையில் வாக்குமூலம் அளிக்க வேண்டும்.
சாட்சிகளிடம் முதன்மை விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடத்தப்படும். இருப்பினும், விசாரணை தொடங்குவதற்கு முன், தேர்தல் மனுக்களை நிராகரிக்கக் கோரி எம்.எல்.ஏ-க்கள் மனு தாக்கல் செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்தலாம். அந்த மனுக்களில் பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். இந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் மனுக்களின் எண்ணிக்கை நிச்சயமாக மிக அதிகம் என்று நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்; 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 12 தேர்தல் மனுக்களும், 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 23 மனுக்களும் கோப்புக்கு எடுக்கப்பட்டன. அதேபோல், 2021-ல் வெறும் 13 மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.









