மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான யூடியூப்பர் ‘நிஷாந்த்’தை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை பைபாஸ் ரோடு ‘தனிஷ்க்’ நகைக்கடையில் கடந்த நவ. 12-ல் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பழங்காநத்தத்தைச் சேர்ந்த யூடியூபர் நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், நிஷாந்தின் தோழியும், இன்ஸ்டா பிரபலமுமான திருப்பாலை பார்க் டவுன் பகுதியை சேர்ந்த மீனாட்சி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர். மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நிஷாந்த்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில், ‘இது முக்கிய கொள்ளை வழக்கு. நிஷாந்த் பல நாட்கள் திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளார். இவ்வளவு பெரிய கொள்ளையில் நிஷாந்த் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருப்பாரா என்ற சந்தேகம் உள்ளது. கொள்ளைக்கு பிறகு நிஷாந்த் தப்பிச் செல்ல சிலர் உதவி செய்துள்ளனர். எனவே காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் தெரியவரும்’ என்றனர்.
அப்போது நீதிபதி, நிஷாந்திடம் போலீஸ் காவல் கேட்டுள்ளனர். என்ன சொல்கிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர், “நகைகள் முழுவதையும் கொடுத்துவிட்டேன். 5 நாள் காவல் வேண்டாம். பயமாக இருக்கிறது. ஒருநாள் போதும். கொள்ளையில் என் தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி ஆகியோருக்கு தொடர்பில்லை” என்றார்.
பின்னர் நீதிபதி, ‘நிஷாந்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. விசாரணையின்போது எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக்கக் கூடாது. சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்த வேண்டும், வழக்கறிஞரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் நிஷாந்தை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர்.








