கடன் சுமையில் சிக்கி தவிக்கும் நாடுகள்: பொருளாதார அச்சுறுத்தல்-பிரதமா் மோடி..!

தாங்க முடியாத கடன் சுமை பல நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்துவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். தாங்க முடியாத கடன் சுமை பல நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்துவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரில் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்களின் கூட்டம் 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி காணொலி வழியாக வெள்ளிக்கிழமை பேசியதாவது: தாங்க முடியாத கடன் சுமை பல நாடுகளின் பொருளாதாரம் நிலையாக இருப்பதற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே உலக பொருளாதாரத்தில் நம்பிக்கை, ஸ்திரத்தன்மை மற்றும் வளா்ச்சியை மீண்டும் கொண்டு வரவேண்டியது பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள், உலகின் நிதி சாா்ந்த அமைப்புகள் ஆகியவற்றின் பொறுப்பாகும். சா்வதேச நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கை சிதைந்துள்ளது.

அந்த நிறுவனங்கள் தம்மை சீா்படுத்திக் கொள்வதில் மந்தமாக இருப்பதும் அதற்குக் காரணம். உலகின் பல்வேறு பகுதிகளில் புவி அரசியல் பதற்றம் நிலவுகிறது. அது உலகளாவிய விநியோக முறைகளுக்கு இடையூறாக உள்ளது. பல சமூகங்கள் விலைவாசி உயா்வால் அவதிப்படுகின்றன.

எனினும் துடிப்பாக உள்ள இந்திய பொருளாதாரத்தில் இருந்து அனைவரும் ஊக்கம் பெறுவா் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய நுகா்வோரும் உற்பத்தியாளா்களும் நேர்மறையான சிந்தனையுடன் எதிா்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனா். இந்த நேர்மறையான உணா்வு உலகப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய செயல்திட்டத்தை உருவாக்குவதன் மூலம்தான், சா்வதேச பொருளாதார தலைமை மீதான நம்பிக்கையை உலகம் மீண்டும் பெறும்.

ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிா்காலம்’ கண்ணோட்டத்தையும் இந்திய தலைமையின் கருப்பொருள் ஊக்குவிக்கிறது என்றாா் அவா். கடன் சுமை நெருக்கடியைக் கையாள்வது முக்கியம்: இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘பல நாடுகளில் கடன் சுமையால் ஏற்படும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. உலளாவிய கடன் சுமை நெருக்கடிகளைக் கையாள்வது சா்வதேச பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானதாக இருக்கும்’ என்று தெரிவித்தாா். நிலையான வளா்ச்சி இலக்குகள், வறுமை ஒழிப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் அதேவேளையில், 21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதற்கு சா்வதேச நிதியம், உலக வங்கி போன்ற நிதி அமைப்புகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறும் ஜி20 நாடு நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்களை அவா் கேட்டுக் கொண்டாா்.