தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள சூழலில், இது மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் 10 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்புடையவர்களாக இருப்பது அதிகரித்துள்ளது.இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என தொடர்ந்து பல குற்றங்களில் வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.குற்றங்களில் ஈடுபடுபவர்களை காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்து கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக தமிழக அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது?
பணி நிமித்தமாக பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதும் இயல்பானது. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது நிறுவன உரிமையாளர்களிடமோ உள்ளதா? அந்த விவரங்கள் தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள் எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்களின் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடங்கள் என அனைத்து தகவல்களையும் வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.






