பஞ்சாப்பில் மீண்டும் தனிநாடு உருவாக்க காலிஸ்தான் திட்டம் – துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிரிவினை ஆதரவாளர்கள்..!

மிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் காலிஸ்தான் எனப்படும் சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் அமைப்பின் குரல் வலுவாக ஒலிக்கிறது.

காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒன்று கூடுதல் போன்ற நிகழ்வுகள் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத குரல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

1980களில் நாளேடுகளின் தலைப்பு செய்திகளில் பிரதான இடம்பெற்றது பற்றி எரிகிறது பஞ்சாப்.. சீக்கியர்கள் ஒரு தனி தேசிய இனம்; சீக்கியர் தேசிய இனத்துக்கு தங்களைத் தாங்களே ஆளுகிற சுய நிர்ணய உரிமை உண்டு; ஆகையால் இந்திய நிலப்பரப்பில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைந்த தனி சீக்கிய நாடு- காலிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் பஞ்சாப் பிரிவினைவாதத்தின் குரல்.

பஞ்சாப் மாநிலத்தில் இந்த பிரிவினை குரலை ஆயுதம் மூலம் எழுப்பியவர் பிந்தரன் வாலே. இந்த பிரிவினை குரல் டெல்லி மத்திய அரசால்தான் அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது என்கிற கருத்து இப்போதும் உண்டு. ஆனால் யார் இதனை உருவாக்கியதாக சொன்னார்களோ அதே இந்திரா காந்தி அம்மையார்தான் பிந்தரன் வாலேயின் கதையையும் அவரது பிரிவினைவாத குரலையும் முடிவுக்கு கொண்டு வந்தார். இதன் விளைவாகத்தான் இந்திரா காந்தி அம்மையார் சீக்கியர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்பது துயரம் தோய்ந்த ரத்த வரலாறு.

1990கள் வரை பஞ்சாப் மண்ணில் வன்முறை மூலம் வலியுறுத்தப்பட்ட பிரிவினைவாத குரல் மெல்ல மெல்ல அடங்கிப் போனது. பிரிவினைவாதம் பேசியவர்கள் கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல நாடுகளில் இந்திய அரசியல் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர். அங்கேயும் நாடு கடந்த காலிஸ்தான் அரசு என்பன உள்ளிட்டவற்றை அமைத்து இன்றளவும் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை சீக்கியர்களிடம் நெருப்பு அணையாமல் வைத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது முதலே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தலையெடுக்க தொடங்கினர். டெல்லியில் அதற்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடந்த போதும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி, செங்கோட்டையில் அந்த இயக்கத்தின் கொடியை ஏற்றி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பஞ்சாப்பில் காலிஸ்தான் குறித்த சலசலப்புகள் வெடித்திருக்கின்றன. வாரஸ் பஞ்சாப் தே என்பது காலிஸ்தான் தனிநாடு கோருகிற அமைப்பு. இதன் தலைவரான அம்ரித்பால் சிங், பிந்தரன்வாலேவின் அடுத்த வெர்சனாக கருதப்படுகிறவர். அம்ரித்பால் சிங்கின் உறவினர் அல்லது உதவியாளர் எனப்படுகிற தூஃபன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தூஃபன் தடுத்து வைக்கப்பட்டிருந்த காவல்நிலையத்தை நோக்கி பெருந்திரளாக வாள், துப்பாக்கிகளுடன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு காவல்நிலையத்தைக் கைப்பற்றினர். தங்களை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிதத்ஷா உள்ளிட்ட எவராலும் எதுவும் செய்ய முடியாது என்றனர். தற்போது தூஃபன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தூஃபன் கைதை முன்வைத்து இப்போது பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.