சீனாவில் மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா… மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்..!

சீனாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், ஒரே நாளில் புதிதாக சுமார் 24 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே வாட்டிவதைத்த கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதல் முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார மையத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தடுப்பூசி உள்ளிட்ட யுக்திகளைக் கொண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதேவேளை, சீனாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் 24473 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 22208 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெய்ஜிங்கில் வசிக்கும் 87 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டு அரசு 6 மாதங்களுக்குப் பின் முதல் கொரோனா உயிரிழப்பு இதுவே.

இதனிடையே, சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வணிக வளாகங்கள், கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அவசிய தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. சீனா அரசு கோவிட் பரவலை தடுக்க ஜீரோ கோவிட் பாலிசி(Zero Covid Policy) என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.