கோவையில் மீண்டும் திறந்துட்டாங்க கொரோனா ‘கன்ட்ரோல் ரூம்’… இதுவரை ரூ.2.30 கோடி அபராதம் வசூல்..!

கோவை: மக்கள் கூடும் இடங்களில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம், ‘மாஸ்க்’ அணியாதவர்களிடம் இருந்து இதுவரை, 2.30 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது; ‘கன்ட்ரோல் ரூம்’ மீண்டும் திறந்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.தற்போது, ‘மாஸ்க்’ கட்டாயமாக்கப்பட்டும் பொது இடங்களில் பலர் அலட்சியமாக இருப்பது, மூன்றாவது அலைக்கு வழிவகுத்துள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு அம்சங்களையும், கண்காணிப்பையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் ‘மாஸ்க்’ அணியாதவர்களிடம், அபராதம் வசூலிக்கப்படுகிறது.கொரோனா முதல், இரண்டாவது அலை சமயத்தில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறை(கன்ட்ரோல் ரூம்) திறக்கப்பட்டது. தொற்று அதிகரிப்பை அடுத்து, தற்போது மீண்டும் திறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.’கன்ட்ரோல் ரூம்’ பொறுப்பாளர் முகுந்தன் கூறியதாவது:கொரோனா கட்டுப்பாட்டு அறையை, 0422 2300132, 0422 2302323 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, நோய் குறித்த சந்தேகங்கள், தடுப்பூசி உள்ளிட்ட விபரங்களை கேட்டறியலாம். தொடர்பு கொண்டவரின் குறைகள், உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது.நோய் பாதித்து, வீட்டு தனிமையில் இருப்பவர்களை தினமும் தொடர்பு கொண்டு சிகிச்சை, ஆரோக்கியம் குறித்து கேட்டறிகிறோம். நோயாளிகளுக்கு தேவையான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இதுவரை ரூ.2.30 கோடி!மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஸ்குமாரிடம் கேட்டபோது, ”கொரோனா பாதிப்பு ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை, 2 கோடியே, 30 லட்சத்து, 79 ஆயிரத்து, 265 ரூபாய் அபராதம் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து வசூலித்துள்ளோம். நேற்று(நேற்று முன்தினம்) மட்டும், 11 ஆயிரத்து, 400 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதுபோன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், தேவையான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்,” என்றார்.