சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து… 2 பேர் வீடுகளில் போலீஸ் அதிரடி சோதனை..!

கோவையில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்களின் செயல்பாடுகள்,சமூக வலைத்தள பதிவுகள், தொடர்பு கொள்ளும் நபர்கள் அவர்கள் எங்கு செல்கின்றனர்?உள்ளிட்ட பலவற்ற கண்காணிக்கிறார்கள். இந்த நிலையில் கரும்புக்கடை .பாரத் நகரை சேர்ந்த சுலைமான் ( வயது 26)சபா கார்டனைச் சேர்ந்த அப்துல் காதர் ( வயது 27)ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்களை போலீசார் கண்காணித்தனர்.சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு இருந்ததால் இருவரது வீடுகளிலும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். அவர்களது வீடுகளில் இருந்து சில ஆவணங்கள் மற்றும் மடி கணினியையும் கைப்பற்றிய போலீசார் 2 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.இதே போல் மேலும் சிலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- சோதனை நடைபெற்ற 2 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டது. கோவையில் கடந்த கால சம்பவங்கள் கருத்தில் கொண்டு குழுவாக செயல்படுபவர்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சுக்குரிய கருத்துக்களை பதிவிடுபவர்கள் உட்பட பலரும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். என்று தெரிவித்தனர்.