“பகலில் கட்டிட வேலை… இரவில் Robbery”… பிரபல கொள்ளையன் கைது – ரூ.56 லட்சம் தங்கம் பறிமுதல்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வீடு புகுந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன ..இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையனை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஒரு மர்ம நபர் தப்பிச்செல்லும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர். அந்த எண்ணை வைத்து அவரின் செல்போன் எண்ணையும் கண்டுபிடித்தனர். அந்த செல்போன் எண் மூலம் அவர் யார்? என்று விசாரணையை தொடங்கினார்கள். இதில் அவர் மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் கோட்டூரில் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்தனர். பின்னர் அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தார்கள். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்குபிடி விசாரணையை மேற்கொண்டனர். இதில் அவர் பகலில் கட்டிடவேலைக்கு செல்வதும், இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 56 பவுன் மதிப்புள்ள தங்க கட்டிகள், இருசக்கர வாகனம் இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கொள்ளையடித்த நகைளை அவர் உருக்கி வைத்துள்ளார். இந்த தங்கத்தின் மதிப்பு மட்டும் ரூ.56 லட்சம் இருக்கும்.. இவர் மதுரையில் வீடு புகுந்து திருடி சொகுசாக வாழ்ந்து வந்தார். இவர் மீது மதுரையில் 15க்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. பின்னர் அவர் மதுரையிலிருந்து கோட்டூருக்கு வந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார் ..திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ராமச்சந்திரனுக்கு அந்த பணம் போதவில்லை. இதனால் அவர் மீண்டும் திருட்டு தொழிலில் ஈடுபட முடிவு செய்தார். இதன் படி கட்டிட வேலைக்கு செல்லும் அவர் பகலில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டுமிட்டு இரவில் அந்த வீட்டிற்கு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். திருடிய பணத்தில் மது அருந்துவது மற்றும் பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.இந்த கொள்ளையனை பிடித்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.