திருச்சியில் காங்கிரஸார் போஸ்டர் யுத்தம்.!!

திருச்சியைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.பி அடைக்கலராஜ். காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு அவர் 4 முறை வெற்றிபெற்று எம்.பி ஆனார். கடந்த 1984ம் ஆண்டு முதன்முதலாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர். 1984, 1989 மற்றும் 1991ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அடுத்ததாக 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார்.
தமிழ்நாடு காங்கிரஸின் துணைத் தலைவராக இருந்த நிலையில் கடந்த 2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். திருச்சி மாவட்ட காங்கிரஸில் இன்னும் ஏராளமானவர்கள் அடைக்கலராஜின் ஆதரவாளர்களாக உள்ளனர். இவரின் மகன் ஜோசப் லூயிஸ் என்பவர் காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது இவருக்கே சீட்டு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் அடைக்கலராஜ் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு சீட் வழங்கப்பட்டது.
ஜோசப் லூயிஸ்
இந்த நிலையில் திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் சரி இல்லை என்று திருச்சி பகுதியில் சிலர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இந்த முறை கண்டிப்பாக அடைக்கலராஜ் மகன் ஜோசப் லூயிசுக்குத்தான் தர வேண்டும், அவரையே வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையை வலியுறுத்தி திருச்சி தொகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திருச்சி காங்கிரஸ் தொண்டர்களின் பாதுகாவலர் அண்ணன் அடைக்கலராஜின் புதல்வர், திருச்சி மக்களவைத் தொகுதிக்கு சொந்தக்காரர், எங்கள் தளபதி ஜோசப் லூயிஸை திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என்று அந்த போஸ்டரில் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
திருச்சி மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதிமுகவும் திருச்சியை கேட்டு வலியுறுத்தி வருவதால் திமுக வட்டாரத்திலும் பரபரப்பான சூழலே நிலவுகிறது.