அமெரிக்காவில் ராகுல் காந்தியின் கூட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள்… கையில் எடுத்த பாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்..!

லிபோர்னியா: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்காவின் கலிபோர்னியா கூட்டத்தில் காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் முழக்கமிட்டனர்.

ஆனால் ராகுல் காந்தி கோபப்படாமல் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

2019-ம் ஆண்டு பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்காக குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். அப்போது எம்பி என்ற அடிப்படையிலான தமக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு கடவுச் சீட்டையும் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

இதனையடுத்து 10 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஒரு மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவுக்கு பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது ராகுல் காந்தி மீது தாம் தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ராகுல் காந்தி வெளிநாடு செல்வதால் இவ்வழக்கு விசாரணை பாதிக்கும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 3 ஆண்டுகள் செல்லக் கூடிய பாஸ்போர்ட் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் பெறப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுடன் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி – பாஜக- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆகியவற்றை கடுமையாக சாடினார். கடவுளுக்கே பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்ற தியரியை சொல்லித் தரக் கூடியவர் பிரதமர் மோடி என்றார். அத்துடன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவுக்கும் இந்திய அரசியல் சாசனத்துக்குமான அச்சுறுத்தல் எனவும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி இருந்தார். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியே தீருவோம் எனவும் ராகுல் காந்தி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கும் போது காலிஸ்தான் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் சிலர் முழக்கங்களை எழுப்பினர். ஆனால் ராகுல் காந்தி இதற்கு கோபப்படவில்லை. பார்வையாளர்களில் சிலர், பாரத் ஜோடோ என முழக்கங்களை எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி, எங்களது பாசம் அனைவரிடமும் இருக்கிறது. நீங்கள் சொல்ல வருவதை நாங்கள் நிச்சயம் கேட்போம். நீங்கள் சொல்வதைக் கேட்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறவர்கள். நிச்சயம் கோபமோ, ஆவேசமோ அடையமாட்டோம். நம்மிடம் கருத்து சொல்கிறவர்களிடம் அன்பாக இருப்பதுதான் நமது இயல்பு என்றார்.

ஆனால் காலிஸ்தான் தீவிரவாதிகள் முழக்கம் போடும் போது ராகுல் காந்தி சிரித்து கொண்டிருந்தார்.. அப்படியானால் ஆபத்தான் ஒரு கட்டம் வரப் போகிறது என காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கொளுத்திப் போட்டார். பாஜகவின் அமித் மால்வியாவும், 1984-ம் ஆண்டு சீக்கியர் படுகொலை நெருப்பு மிகப் பெரியது என கோர்த்து விட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஶ்ரீநாத், ராகுல் காந்தியை எதிர்க்கிறேன் என நினைத்துக் கொன்டு காலிஸ்தான் தீவிரவாதிகளை பாஜக ஏன் ஆதரிக்கிறது? காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பாரத் ஜோடோ முழக்கங்கள் மூலம் மக்கள் பதில் கொடுத்தனர் என பதிலடி தந்துள்ளார்.