மேட்டுப்பாளையம் அருகே ஊராட்சிகளில் ஊழல் புகார் எதிரொலி… தலைவர்களுக்கான காசோலை கையெழுத்து உரிமை ரத்து- கோவை கலெக்டர் உத்தரவு..!!

கோவை:  மேட்டுப்பாளையம் அருகே மருதூர், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிகளில் ஊழல் புகார் எதிரொலியால் தலைவர்களுக்கான காசோலை கையெழுத்து போடும் உரிமைத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் மருதூர் ஊராட்சிக்கு பூர்ணிமாஅறிவு ரங்கராஜ், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு மாலா என்கிற விமலாவும் தலைவராக உள்ளனர். இந்நிலையில் ஊராட்சிகளில் 2020- 21 ஆம் ஆண்டில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு, கிருமிநாசினி தெளித்து கூலி வழங்கியதில் முறைகேடு, 2020-21 ஆம் ஆண்டு மற்றும் 2021 -22 ஆம் ஆண்டு ஓ.ஹெச்.டிசுத்தம் செய்து கூலி வழங்கியதில் முறைகேடு, கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு, 100 நாள் வேலைத்திட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு வேலை செய்பவர்களுக்கு பணி வழங்குவதில் ஆர்வம் கட்டிவிட்டு உண்மையாக வேலையில்லாதவர்களுக்கு பணி வழங்கியதில் முறைகேடு இப்படி அடுக்கடுக்காக புகார்கள் மாவட்ட ஆட்சியருக்கு சென்றது. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இந்த இரு ஊராட்சி தலைவர்கள் மீதும் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஊராட்சித் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் மீதான விசாரணை முடியும் வரை இவர்களுக்கான காசோலை கையெழுத்து இடம் உரிமை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இது மற்ற ஊராட்சி தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் கூறியதாவது: சிக்கரசம்பாளையம் மருதூர் ஊராட்சி தலைவர்கள் மீது தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தது. இதனுடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து இரு ஊராட்சிகள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஊராட்சித் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார்கள் மீதான விசாரணை முடியும் வரை அவளுக்கான காசோலை கையெழுத்திடும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுவரை ஊராட்சிக்கு தேவையான வரவு செலவுகளுக்கான கையெழுத்திடும் உரிமை வட்டார வளர்ச்சி அலுவலர் என்ற முறையில் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.