போலீசுக்கு எதிரான புகார்களை, அவர்களே எப்படி விசாரிக்க முடியும்- நீதிமன்றம் கேள்வி.!!

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகத் தமிழ்நாட்டில் காவல் புகார் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சுதந்திரமான நபரை நியமிக்கும் வகையில் இது சம்பந்தமான திருத்தம் செய்வது குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்கத் தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

சென்னை: காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராகப் புகார்களைக் கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காவல்துறை சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராகப் புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகக் கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று (மார்ச்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியதாகவும், மாநில அளவில் உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் அடங்கிய குழுவும், மாவட்ட அளவில் ஆட்சியர், எஸ்.பி அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சுதந்திரமான நபரை ஏன் புகார் ஆணையத்தில் நியமிக்கவில்லை. காவல் துறையினருக்கு எதிரான புகார்களை, அவர்களே எப்படி விசாரிக்க முடியும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகப் புகார் குழு அமைக்கப்பட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.

எனவே இது சம்பந்தமான விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து விளக்கமளிக்க அரசுத்தரப்பில் ஒரு வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், புகார் ஆணையம் அமைப்பது தொடர்பான விதிகளில் திருத்தம் செய்வது குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்க அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.