கோவையில் மின் கம்பியில் டிப்பர் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது: இதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழப்பு

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இன்று அதிகாலை மின்கம்பியில் டிப்பர் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி ஓட்டுநர் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

 

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது .இன்று அதிகாலை 4 மணி அளவில் நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே குமரபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தார் கலவை ஏற்றிபடி டிப்பர் லாரி வந்தது. லாரியில் இருந்த தார்கலவையினை சாலையில் கொட்டுவதற்காக ஹைட்ராலிக் மூலம லாரி ஓட்டுனர் ஆறுமுகம் இயக்கியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதி அங்கிருந்த மின்கம்பியில் உரசியது. இதில் தார் கலவையுடன் இருந்த லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்நிலையில் ஓட்டுநர் ஆறுமுகம் டிப்பரை கீழே இறக்குவதற்கான லிவரை பிடித்த பொழுது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியது. இது சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் ஆறுமுகம் உடல் கருகி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் லாரியும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.