கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!

கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊதியம் அவர்களது வங்கி கணக்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகரில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து தூய்மை பணியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நேற்று முன் தினம் இரவில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பிரச்சனை அரசின் கொள்கை முடிவு. அதில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். இதை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதில் தூய்மை பணியாளர்கள் உறுதியாக உள்ளனர். தனியார் மையத்தை கைவிட வேண்டும் 3,600 ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணிக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ( வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட உள்ளதாக தூய்மை பணியாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் மாநகரில் தினமும் குப்பைகள் தேங்கி சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.