கோவை போலீசார் அதிரடி நடவடிக்கையால் 721 கிராமங்களில் கஞ்சா புழக்கம் இல்லை-மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தகவல்..!

கோவை: மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 142 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு 91 ஆக குறைந்துள்ளது. இதில் 90 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கு பாதியாக இந்த ஆண்டு கொலை வழக்குகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 431 போக்சோ வழக்குகள் பதியப்பட்டன. இந்த ஆண்டு 529 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 17 பேருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு கோவை சரகத்தில் 87 பேருக்கு போக்சோ வழக்கில் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

1054 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1420 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை சரக்கத்தில் 1210 கிராமங்கள் கஞ்சா புழக்கம் உள்ள கிராமங்களாக கண்டறியப்பட்டு அவற்றில் 721 கிராமங்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்பட்டுள்ளது.
308 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 9 ஆதாய கொலைகள் நடைபெற்றது. இந்த ஆண்டு நான்காக குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு மேற்கு மண்டலத்தை கஞ்சா இல்லாத மண்டலமாக மாற்றுவதே எங்களது முதன்மையான இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.