வரும் 28ம் தேதி கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்..!!

கோவையின் காவல் தெய்வம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோனியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 28ஆம் தேதி நடக்கிறது.இதையொட்டி கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக முகூர்த்தக்கால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் சந்திரமதி அறங்காவலர் குழு தலைவர் கோ. குமார் முன்னாள் அறங்காவலர் ராம்கி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று ( செவ்வாய்க்கிழமை) இரவு 7:30 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், வருகிற 20-ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும் |இரவு அக்னி சாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 21ஆம் தேதி புலிவாகனத்திலும், 22ஆம் தேதி கிளி வாகனத்திலும், 23ஆம் தேதி சிம்மவாகனத்திலும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அன்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. 24ஆம் தேதி அன்ன வாகனம், 25ஆம் தேதி காமதேனு வாகனம் | 26ஆம் தேதி வெள்ளை யானை வாகனத்திலும், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வருகிறார். 27ஆம் தேதி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 28ஆம் தேதி மதியம் 2 – 0 5 மணிக்கு நடக்கிறது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள்,ஆதீனங்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கின்றனர் தேர் ராஜ வீதி தேர்நிலைத்திடலில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர்நிலைத்திடலை வந்தடையும் .வருகிற 29ஆம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டை 1 – ந் தேதி தெப்பத் திருவிழா, 2 – ந் தேதி கொடி இறக்கம் 4-ந் தேதி வசந்த விழா ஆகியவை நடக்கிறது.