கோவை அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்க ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு..!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு அமைப்பதற்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கட்டண சிகிச்சை வார்டு அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டுக்கு அரசு அனுமதியளித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிா்மலா கூறியதாவது:
அரசு மருத்துவமனையில் அமைக்கப்படும் கட்டண சிகிச்சை வார்டு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் செயல்படுத்தப்படும். அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழா கட்டடத்தில் முதல் தளத்தில் கட்டண சிகிச்சை வார்டு அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 3 தனி அறைகள், 12 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை வார்டு அமைக்கப்படுகிறது. தனி அறைகள் பிரிவில் 2 அறைகளில் தலா இரண்டு படுக்கைகளும், மற்றொரு அறையில் ஒரு படுக்கை வசதியும் ஏற்படுத்தப்படும். 12 படுக்கைகளுடன் கூடிய பொது சிகிச்சை வார்டில் தலா 6 படுக்கைகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. தனி அறைகள் மகப்பேறு சிகிச்சைக்காக மட்டும் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கட்டண சிகிச்சை வார்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார் .