கோவை கார் வெடிப்பு: என்ஐஏ இயக்குனர் தினகர் குப்தா விசாரணை-சைலேந்திரபாபுவுடன் நேரில் சந்தித்து ஆலோசனை..!

சென்னை: கோவை கார் வெடிப்பு மற்றும் கர்நாடகாவில் மங்களூர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த நிலையில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனர் தினகர் குப்தா இன்று சென்னை வந்து டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து ஆலோசித்து நேரில் தகவல்களை பெற்றார்.

இதனால் மீண்டும் கோவை கார் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த மாதம் 23ம் தேதி அதிகாலையில் கார் வெடித்து சிதறியது. தீபாவளிக்கு முந்தைய நாள் இந்த சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். காரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஜமேஷா முபின் பற்றி விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 2019ல் அவரிடம் என்ஐஏ விசாரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த வேளையில் ஜமேஷா முபினுடன் முந்தைய நாள் இரவில் சிலர் மூட்டைகளை காரில் ஏற்றியது தெரியவந்து. இதையடுத்து உக்கடம் முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜிஎம் நகர் முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது.

மேலும் ஜமேஷா முபின் வீட்டில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது வெடிப்பொருட்கள், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடிகள் உள்ளிட்டவை வரையப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மங்களூர் பம்ப்வெல் அருகே நாகுரி பகுதியில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் ​​புருஷோத்தம் (60) என்பவரும், ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரீக் (23) என்பவரும் காயமடைந்தனர். இதில் முகமது ஷாரீக் தான் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்தது தெரியவந்தது. இதில் பயங்கரவாத அமைப்பின் பின்புலம் இருப்பதாக கருதப்பட்டது. மேலும் இவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணையும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் தான் கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு ஆகியவற்றுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனென்றால் மங்களூர் குக்கர் வெடிகுண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரீக் தமிழகத்தின் கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு வந்து சென்றதும், கோவை ஈஷா மையத்தின் ஆதியோகி படத்தை வாட்ஸ்அப் டிபியாக வைத்திருந்ததும் தெரியவந்தது. தற்போது இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடிப்பு வழக்குகளில் நேரடியாக என்ஐஏவின் இயக்குனர் தினகர் குப்தா இறங்கி உள்ளார். அதன்படி இன்று தினகர் குப்தா சென்னை வந்தார். சென்னையில் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து ஆலோசித்தார். இந்த வேளையில் கோவை கார் வெடிப்பு தொடர்பான முக்கிய தகவல்களை டிஜிபி சைலேந்திரபாபு, நேரடியாக என்ஐஏ இயக்குனர் தினகர் குப்தாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.