இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரிஷி சுனக் நேற்று முதல் முறையாக வெளியுறவு தொடர்பாக பேசியுள்ள பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சர்வாதிகாரப் போக்கு இங்கிலாந்துடனான உறவுக்கு உகந்ததல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்றால் தற்போது சீனாவில் பெரும்பாலான நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது. இதற்கு சீனா முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், போராட்டம் நடத்தும் பொதுமக்களின் தேவைகள் குறித்தும், கோரிக்கைகள் என்னவென்றும் கேட்காமல், அவர்களை பலப்பிரயோகம் செய்து அடக்கும் முயற்சியில் ஜி ஜின் பிங் இறங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உலகில் சீனா போன்ற இங்கிலாந்தின் போட்டியாளர்களை எதிர்கொள்ள தயார் என்றும், வெறும் பேச்சுகளால் அல்ல வலுவான நடவடிக்கைகளால் என்றும் கூறியுள்ளார்.
இதற்காக ஒத்துக் கருத்துக்களை கொண்ட அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் கை கோர்க்கவும் தயார் எனக் கூறியுள்ள அவர், சீனாவின் சர்வாதிகாரப் போக்கு தங்கள் கொள்கைகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடைமுறைகளின் போதே ரிஷி சுனக் சீனாவுக்கு எதிரான கருத்துக்களை கூறியிருந்தார். இங்கிலாந்து மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு சீனா பெரிய அச்சுறுத்தல் எனக் கூறி தனது சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை பதிவு செய்திருந்த ரிஷி சுனக், தற்போது பிரதமராக அதை உறுதி செய்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள கல்வி நிலையங்களில் தங்களது மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்ப்பதற்காக சீனா அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்திருப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த ரிஷி, தான் அதிகாரத்திற்கு வந்தால் சீனாவின் உலகளாவிய இணைய அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றிணைப்பேன் என்றும் கூறியிருந்தார். பொருளாதர ஸ்திரத்தன்மை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய விஷயங்களில் முடிவெடுப்பதில் சீனாவின் செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதை பெரும்பாலான மேற்குலக நாடுகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
ரிஷி சுனக்கின் இது போன்ற பேச்சுக்களால் இங்கிலாந்து-சீனா இடையிலான உறவில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், ரிஷி சுனக்கின் சீன எதிர்ப்பு நிலை மற்றும் பேச்சு ஆகியவற்றிற்கு இங்கிலாந்தில் உள்ள எதிர்க்கட்சிகள் முழுமையாக அதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான ராஜாங்க உறவு நீடிக்குமா, இல்லை முடிவிற்கு வருமா என்பது தான் தற்போதைய பெரிய எதிர்பார்ப்பு.
Leave a Reply