என்னோட அடுத்த டார்கெட் உதயநிதி..? சவுக்கு சங்கருடன் இணையும் சீமான்… விவசாயி சின்னத்தில் போட்டி…

சென்னை : சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம், நானே இறங்கி அவருக்காக வேலை செய்வேன் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அரசியலில் இறங்கி உதயநிதி நிற்கும் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இன்று மாலை அவரது வீட்டில் சென்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சீமான், சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சவுக்கு சங்கருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக விவசாயி சின்னத்தில் கூட அவரை வேட்பாளராக நிறுத்துவேன் என்றும் சீமான் கூறியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்து வந்த சவுக்கு சங்கரின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. எனினும் அவர் மீது உள்ள 4 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 4 வழக்குகளில் இருந்தும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் தினமும் ஆஜராகி நிபந்தனையின்படி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் சவுக்கு சங்கர். மேலும், அரசியலில் குதிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். தொடர்ந்து திமுகவை விமர்சித்து வரும் சவுக்கு சங்கர், வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட்டாலும் சரி, எங்கு போட்டியிட்டாலும் சரி அவருக்கு எதிராக போட்டியிடப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டியிட்டால் தனக்கு அதிமுக ஆதரவளிக்கக்கூடும், நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எனக்கு ஆதரவளிக்கும் என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தான் கைது செய்யப்பட்டபோது தனக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இன்று மாலை சந்தித்துப் பேசியுள்ளார் சவுக்கு சங்கர். அதன் பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய சீமான், சவுக்கு சங்கர் மீது தனிப்பட்ட பகையால் வழக்குகள் போடப்பட்டுள்ளது. ஆடிட்டர் குரு மூர்த்தியை விடவா நீதிமன்றம் குறித்து சவுக்கு சங்கர் பேசிவிட்டார்? அரசியல்வாதிகளின் காலில் விழுந்து நீதிபதிகள் பதவி வாங்குகிறார்கள் என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதற்காக நீதிமன்றம் அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? சவுக்கு சங்கர் என்னை விமர்சித்தால் அதுவும் ஒரு பாராட்டுதான். விமர்சிக்க வேண்டிய இடத்தில் ஒருவர் இருக்கிறார் என்றால் அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், சவுக்கு சங்கருக்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் பலமாக நிற்கும். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சவுக்கு சங்கர் போட்டியிட்டால் அந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை நிறுத்தாமல் சவுக்கு சங்கருக்கு ஆதரவு அளிப்போம். விவசாயி சின்னத்திலும் அவரை களம் இறக்கத் தயார். அப்படி இல்லை என்றால் அவர் சுயேட்சையாக போட்டியிட விரும்பினாலும் நான் இறங்கி வேலை செய்வேன் என சீமான் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து சவுக்கு சங்கர் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவு அளிப்பதாக சீமான் கூறியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஆதரவு கொடுத்தாலும் உதயநிதியின் வெற்றியைத் தடுக்க முடியாது என்கின்றனர் திமுகவினர். கடந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வாக்குகள் 93,285. இரண்டாம் இடம் பெற்ற பாமக வேட்பாளரின் வாக்குகள் 23,930. மூன்றாமிடம் பெற்றது நாம் தமிழர் கட்சி. அக்கட்சி 9,193 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.