சின்னத் தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் – 24-ந் தேதி மறுஓட்டு எண்ணிக்கை..!

கோவை: தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன்படி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும், அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திர வடிவு உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2.1.2020-ம் ஆண்டு எண்ணப்பட்டது. இதில் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு எண்ணப்பட்ட வாக்குகள் இரவு 10 மணி அளவில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியானது. இதில் முதலில் தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சுதா 2,553 வாக்குகளும், அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்திர வடிவு 2,549 வாக்குகளும் பெற்றதாகவும், இதில் சுதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி தேர்தல் அலுவலர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சுதாவிற்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வாக்குகள் மறுபடி எண்ணப்பட்டு மறுநாள் (3.1.2020) அதிகாலை 4 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் சவுந்திர வடிவு வெற்றி பெற்றதாக அறிவிக்ப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா இதுகுறித்து அங்கிருந்த தேர்தல் அதிகாரியிடம் ஆட்சேபனை மனு அளித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதா சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்திட உத்தரவிடக்கோரி கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் வருகின்ற 24-ந் தேதி மறுவாக்கு  எண்ணிக்கையை நடத்துவதற்கான இடத்தையும் நேரத்தையும் அறிவித்துள்ளார். அதன்படி குருடம்பாளையம் ஊராட்சி அருணா நகர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் மதியம் 12 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடக்கிறது.