கிறிஸ்துமஸ் தினத்தில் கொட்டி தீர்த்த பனியால் 28 பேர் பலியான சோகம்..!

மெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் தினத்தன்றும் கொட்டிய பனியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் 28 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பனிப்பொழிவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், டெக்சாஸ், மெக்சிகோ, நியூயார்க்கின் பஃபேலோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. மேலும், கடுமையான காற்று காரணமாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் மூழ்கி உள்ளனர்.

அதிகமான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில், பல அடி உயரத்துக்கு பனி குவிந்திருப்பதால், மக்களை கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால், மக்கள், வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகவே வந்தடைகின்றன.

இதுகுறித்து பேசிய நியூயார்க் ஆளுநர் ஹோச்சுல், ஒரு மணி நேரத்திற்கு 80 மைல் வேகத்தில் காற்று வீசியதாகவும், இது நியூயார்க்கின் வரலாற்றில் மிக நீண்ட பனிப்புயல் எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க மக்கள் தற்போது இயற்கை தாயுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.