முதல்வர் ஸ்டாலின் துபாய் அமைச்சர்களுடன் ஆலோசனை-தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு.!!

மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில், தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.3.2022) துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் (Dubai International Financial Centre) ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின்டூக் அல் மர்ரியையும், (H.E. Abdulla Bin Touq Al Marri) ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி அவர்களையும் (H.E. Dr. Thani Bin ahmed Al Zeyoudi) சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இச்சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவுப்பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின் வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு அமைச்சர்களையும் தமிழ்நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்கள் குழுவினையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் ‘Karunanidhi A Life’ என்ற புத்தகத்தை, அமீரக அமைச்சருக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி பூஜா குல்கர்னி, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் சஞ்சய்சுதிர், துணைத் தூதர் டாக்டர் அமன்பூரி மற்றும் இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதர் திரு. அகமதுஅல் பன்னா ஆகியோர் உடனிருந்தனர்.