கீவ்: உக்ரைன் மீதான போரை மே 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ரஷ்யா தரப்பில் வீரர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. இதை உக்ரைன் ராணுவத்தின் உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி 24ல் துவங்கியது. தொடர்ந்து ரஷ்யா சார்பில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் ஏவுகணை குண்டுவீச்சு நடத்தப்படுகிறது. இதனால் உக்ரைன் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
ரஷ்யாவின் இந்த தாக்குதலில் அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். இருப்பினும் பிற நாடுகளின் ஆயுத உதவியுடன் ரஷ்யாவின் பெரிய ராணுவத்தை உக்ரைன் ராணுவம் பொதுமக்களுடன் சேர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதனால் ரஷ்யா தரப்பிலும் ஏராளமான வீரர்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த ரஷ்யா தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இருப்பினும் உக்ரைனை முழுவதுமாக கைப்பற்றுவது இன்னும் ரஷ்யாவுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
இதற்கிடையே போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே பொலாரஸ், துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் நாளுக்கு நாள் உக்ரைன்-ரஷ்யா இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. கீவ் நகரை கைப்பற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சுற்றி வளைப்பதே ரஷ்யாவின் குறிக்கோளாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதை சுலபமாக செய்துவிடலாம் என ரஷ்யா நினைத்தது. ஆனால் அது நடைபெறவில்லை. தற்போது ரஷ்யாவுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. அதாவது உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவும் நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது ரஷ்யாவை பாதித்து வருவதோடு, உலக அரங்கில் பிற நாடுகளிடம் இருந்து தனித்து விடப்படும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது போரை அதிக நாள் தொடர்வது என்பது உலக நாடுகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இடம் அளிக்கும். இதனால் போரை வெற்றிகரமாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி உக்ரைன் மீதான போரை மே மாதம் 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது. இதனால் படைகளுக்கும் ரஷ்யா தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது உக்ரைன் ராணுவத்தின் உளவுத்துறை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லரின் நாஜி படையை வீழ்த்தியதன் வெற்றி கொண்டாட்டம் ரஷ்யாவில் ஆண்டுதோறும் மே 9ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இது கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்துக்கு முன்பாகவே உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது. இதற்கான உத்தரவும் உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது நடக்கும் பட்சத்தில் நாஜி படையை தோற்கடித்தது, உக்ரைனை கைப்பற்றியது என 2 வெற்றிகளை ஒரே நேரத்தில் ரஷ்யாவில் பிரமாண்டமாக கொண்டாடலாம். இதை கருத்தில் கொண்டு தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
Leave a Reply