அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறைகிறதா…. ரஷ்யா அதிபர் புதின் திட்டம் நிறைவேறுமா..?

சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும்பாலான நாடுகள் டாலர் வாயிலாகவே அனைத்து வர்த்தகத்திற்காகப் பணப் பரிமாற்றங்களைச் செய்யும் காரணத்தால், உலக நாடுகள் மத்தியில் டாலருக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அமெரிக்கா டாலருக்கு மாற்றாக வேகமாக வளர்ந்து வந்த கிரிப்டோ கரன்சியை ஆதரிக்காமல் தொடர்ந்து ஒதுக்கி வந்தது.

இந்நிலையில் ரஷ்யா அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது டாலரின் மதிப்பை மட்டும் அல்லாமல் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பையும் பெரிய அளவில் உயர்த்தும்.

பொதுவாக ஒரு நாணயத்தின் தேவை, பயன்பாடு, அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பொறுத்தே சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு இருக்கும். அந்த வகையில் அனைத்து நாடுகளும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்காக டாலரை மட்டுமே அதிகளவில் சார்ந்து இருக்கிறது.

ஏற்றுமதி செய்யும் நாடுகள் பெரும்பாலும் டாலர் நாணய வடிவில் பேமெண்ட்-ஐ பெறும் காரணத்தால் டாலருக்கான தேவை அதிகரிக்கிறது. இந்தத் தேவையைக் குறைத்தாலே டாலர் ஆதிக்கம் குறைந்து அதன் மதிப்பும் குறையும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குப் பின்பு அமெரிக்கா அரசு ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்-ஐ மொத்தமாகத் தடை செய்துள்ளது. இதேபோல் ஐரோப்பிய நாடுகளையும் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தது.

இதற்காகப் புதன்கிழமை ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தும் 40 சதவீத எரிவாயு மற்றும் 27 சதவீத எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது. இந்த நிலையில் மொத்தமாக ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தடை விதிக்க முடியாது என அறிவித்தது.

இது அமெரிக்காவிற்குப் பெரும் தோல்வியாகப் பார்க்கப்பட்ட நிலையில், ஐரோப்பாவின் நிலையைப் பயன்படுத்திக்கொள்ள ரஷ்யா முடிவு செய்து, புதின் அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அமெரிக்காவிற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

ஐரோப்பாவிற்குக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அளிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் டாலரில் இல்லாமல் ரூபிள் நாணய பரிமாற்றத்தின் வாயிலாகத் தான் அளிக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பாவில் ரூபிள் நாணயத்திற்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரிக்கும்.

இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபிள் மதிப்பு 132 இல் இருந்து 98 ஆக உயர்ந்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான போர் துவங்கி மேற்கத்திய நாடுகள் தடை விதித்த போது 150 ரூபிள் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கத்திய நாடுகளின் SWIFT தடை மூலம் தற்போது இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், பிரிட்டன், இன்னும் பல ரஷ்ய நட்பு நாடுகள் அனைத்தும் ரூபிள் வாயிலாகவே வர்த்தகம் செய்கிறது. இதனால் தற்போது உலக நாடுகளில் டாலரின் தேவை குறைவுக்கு இணையாக ரூபிள் தேவை அதிகரித்துள்ளது.

புதின் அரசின் ஒரு அறிவிப்பு பல தோல்விக்கு வழிவகுத்துள்ளது. இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுமதியைக் காட்டிலும் அதிகளவில் இறக்குமதி செய்யும் நிலையில் டாலரைத் தொடர்ந்து சேர்த்து வருகிறது. இதனால் ஏற்படும் விலை மாற்றத்தின் மூலம் இந்தியா அதிகளவில் பாதிக்கப்படுகிறது.