செஸ் உலகக் கோப்பை… சரித்திரம் படைத்த பிரக்ஞானந்தா..!

பெக்கு: செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்கா வீரர் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அசர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த செஸ் உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சக இந்திய வீரரான தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தினார். அவருடனான 6 டை பிரேக்கர் ஆட்டமும் முடிவடைந்தும் போட்டி சமனில் இருந்தது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சடன் டெத் முறை பின்பற்றப்பட்டது. அதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா அபார வெற்றிபெற்றார்.

இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா பெற்றார். இந்த நிலையில் அரையிறுதியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்டார். கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்ற அரையிறுதியின் இரு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இரு சுற்றுகளிலும் ஃபேபியானோ கருவானாவே ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், பிரக்ஞானந்தா போராடி டிரா செய்தார்.

இந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான டை பிரேக்கர் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதுவும் காலிறுதி ஆட்டத்தை போலவே ரேபிட் முறையில் நடத்தப்பட்டது. இதில் முதல் ஆட்டம் டிராவில் முடிவடைய, இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. இதனால் இரு தரப்பிலும் பரபரப்பு உச்சத்தில் இருந்தது. ஒவ்வொரு நகர்வுகளையும் கவனமாக நேரத்தை வீணடிக்காமல் இருவரும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் டை பிரேக்கரின் 3வது ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா அபார வெற்றியை பெற்றார். இதன் மூலம் அடுத்தப் போட்டியை டிரா செய்தாலே பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என்ற நிலை உருவானது. 4வது சுற்று ஆட்டத்தில் இரு வீரர்களுக்கு தலா 10 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக 10 விநாடிகள் வழங்கப்பட்டது. அந்த ஆட்டமும் டிராவில் முடிந்த நிலையில் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் செஸ் உலகக்கோப்பைக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.