சென்னை பப் விபத்து : இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி – தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்.!!

சென்னை: ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பகீர் கிளப்பி இருக்கும் நிலையில், அந்த பப் ஓனர் தலைமறைவாகி இருக்கிறார்.

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆழ்வார்பேட்டையில் பல கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகிறது. அப்படி செயின்ட் மேரீஸ் சாலையில் இயங்கி வரும் பிரபல பப் ஒன்றில் நேற்று எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.

நேற்று மாலை 7 மணியளவில் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த போது உள்ளே சுமார் 20- 22 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விரைந்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பதில் கவனம் செலுத்தினர். அப்போது விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. அவர்களை மீட்பு சடலமாகவே மீட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பேரில் இரண்டு பேர் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மூன்று பேருமே அங்கே பணியாற்றி வந்த ஊழியர்கள் என்பதும் தெரிய வந்தது. உயிரிழந்தோர் தமிழகத்தைச் சைக்ளோன்ராஜ் (45), மணிப்பூரைச் சேர்ந்த இவுரவ் மேக்ஸ் (24). லாலி (22) என்று அடையாளம் காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அபிராமிபுரம் போலீசாரும் விசாரணை நடத்தினர். உரிய உரிமம் பெற்றே அந்த கேளிக்கை விடுதி இயங்கியது தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக கேளிக்கை விடுதி மேலாளர் சதீஷ் உட்பட 12 பேர் மீது வழக்கு செய்துள்ளனர். கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்திய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக சதீஷ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே கிளப் உரிமையாளர் தலைமுறையாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடித்து விசாரிக்கும் முயற்சியிலும் அபிராமிபுரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து முழு விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது.. எதனால் இந்த விபத்து நடந்தது என்பது குறித்துத் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. மேற்கூரை மொத்தமாக இடிந்து விழுந்து இருந்தால் சேதம் மிக மோசமாக இருந்து இருக்கும்.

முதலில் இந்த விபத்து நடந்த பப்பிற்கு மிக அருகே தான் சுரங்க மெட்ரோ பணிகள் நடந்து வந்ததால் அதில் ஏற்பட்ட அதிர்வுகளால் விபத்து நடந்து இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. சென்னை மெட்ரோ அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை நடத்தினர். அதன் பின்னரே விபத்திற்கும் மெட்ரோ பணிகளுக்கும் தொடர்பு இல்லை என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்தது. மெட்ரோ பணிகளால் கட்டிடத்தில் அதிர்வுகள் ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று மெட்ரோ தரப்பு தெரிவித்துள்ளது.