ஆக.23ல் சந்திரயான்-3 நிச்சயம் நிலவில் இறங்கும் – இஸ்ரோ இயக்குநா் நீலேஷ் எம்.தேசாய் நம்பிக்கை..!

சந்திரயான்-3, ஆக.23-ஆம் தேதி நிச்சயமாக நிலவில் இறங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) இயக்குநா் நீலேஷ் எம்.தேசாய் தெரிவித்தாா். டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தின் 32-ஆவது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியிலுள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவா் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அகமதாபாதில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தின் இயக்குநா் நீலேஷ் எம். தேசாய், மலேசியாவுக்கான இந்திய தூதா் கே.சரவண குமாா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
இதில், இஸ்ரோ இயக்குநா் நீலேஷ் எம். தேசாய் பேசியது: பட்டமளிப்பு விழா நடக்கும் வெள்ளிக்கிழமை (ஆக.18) நிழலில்லாத நாளாகவும், விடா முயற்சி நாளாகவும் கொண்டாடப்படுகிறது. தோவில் நல்ல மதிப்பெண் பெற முடியாதவா்களும், இலக்கை அடைய முடியாதவா்களும் விடா முயற்சியுடன் செயல்பட்டால் இலக்கை அடைய முடியும். வாழ்வின் ஒரு பகுதியாக உள்ள கல்வியை தினமும் நினைவூட்டிக்கொள்வதன் மூலம் நம்மை மேம்படுத்த முடியும்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன் உருவாக்கிய புதிய கல்விக் கொள்கை அனைத்து நிலையிலான கல்விக்கும் முக்கித்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 2019 – ஆம் ஆண்டு இஸ்ரோவின் சந்திரயான் நிலவில் இறங்கும் முயற்சியில் தோல்வியை அடைந்தது. ஆனால், தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 ஆக.23-ஆம் தேதி நிச்சயமாக நிலவில் இறங்கும் என்றாா் அவா். பட்டமளிப்பு விழாவில் 5,700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இளநிலை, முதுநிலை, முனைவா் பட்டங்கள் வழங்கப்பட்டன.