அனுமதி பெறாமல் இயங்கும் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு..!

கோவையில் மசாஜ் சென்டர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இது கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து கவர்ச்சிகர அறிவிப்புகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றன. இதை நம்பி வருபவரிடம் அழகிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருப்பதாகவும் கூறி பணம் பறித்து வருகின்றனர். மசாஜ் சென்டர் நடத்துவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதுடன், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையிலும் அனுமதி பெற வேண்டும். ஆனால் அந்த அனுமதிகள் பெறாமல் புற்றீசல் போல மசாஜ் சென்டர்கள் பெருக ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையில் மசாஜ் சென்டர் நடத்த அனுமதி வழங்கும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு வழக்கத்தை விட வாடகைத் தொகை பல மடங்கு அதிகமாக வழங்கப்படுகிறது. அதாவது 400 சதுர அடி கொண்ட கட்டிடத்திற்கு மாத வாடகை ரூ.50 ஆயிரம் என்றால் மசாஜ் சென்டர் நடத்த ரூ 3 லட்சம் வரை வாடகை கொடுக்கப்படுகிறது. இதற்கு ஆசைப்பட்டு பலரும் தங்களது கட்டிடங்களை மசாஜ் சென்டர் நடத்த கொடுக்கின்றனர். இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ்செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் உரிய அனுமதி பெற்று மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. ஆனால் அனுமதி பெறாமல் இயங்கும் சில மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பதாக புகார்கள் வருகிறது. இது போன்ற மசாஜ் சென்டர்களுக்கு அனுமதி அளிக்கும் கட்டிட உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் .மேலும் கட்டிடத்திற்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்து கடிதம் அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்..