திருச்சி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை மீது வழக்கு பதிவு.!!

திருச்சி நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சிக்கு வருகை தந்தார்.
திருச்சி தென்னூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: திமுக அளித்த 513 வாக்குறுதிகளில் 20-ஐ கூட நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. திருப்புமுனையாகத் திகழும் ஊர் திருச்சிக்கு வளர்ச்சிப் பணிகள் ஏதும் செய்யவில்லை. திமுகவுக்கு திருச்சி மக்கள் மீது அக்கறையில்லை. அதனால் திமுகவுக்கு வாக்களிப்பது பிரயோஜனம் இல்லாதது. திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால் திருச்சி வளர்ச்சியடைவது உறுதி. திருச்சியில் நானும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார் அண்ணாமலை.
இந்தப் பிரசாரத்தின் போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான அமமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, பெரம்பலூரில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருச்சியில் பிரச்சாரம் செய்தபோது தேர்தல் விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இரவு பிரச்சாரம் மேற்கொண்டதால், திருச்சி தில்லை நகர் போலீசார் 5 பிரிவுகளில் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனத் தெரிகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது..