செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை… காவேரி மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!!

திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில் அவரது இதய ரத்தக் குழாய்களில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்பின் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன்படி, காவேரி மருத்துவமனையில் அதிகாலை 5.15 மணியளவில் இதய அறுவை சிகிச்சை தொடங்கிய நிலையில் 10.15 மணிக்கு சிகிச்சை நிறைவடைந்தது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 5 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். செந்தில்பாலாஜி வெண்டிலேட்டர் உதவியுடன் தற்போது மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்கள் அமைச்சர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருப்பார் எனவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் 90 நாட்கள் ஓய்வு தேவை என இதயநோய் சிகிச்சை நிபுணர் அருண் தெரிவித்துள்ளார். முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப 3 மாதங்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு அளித்த சிகிச்சை, உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.