நள்ளிரவில் சாலையோரம் தவித்த பெண்-உதவிக்கரம் நீட்டி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீஸ்..!!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி
சங்கீதா (வயது 42). இவர்களுக்கு சங்கவி என்ற மகள் உள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு சங்கீதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு
வீட்டிலேயே இருந்து வந்தார். அவர் திடீரென மாயமானார். அவரை அவரது
குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை
மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் ஒரு பெண் எதுவும் தெரியாமல் நின்று
கொண்டிருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.
உடனே இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு அந்த பகுதி பொதுமக்கள்
தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம்
போலீசார் அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் மாயமான சங்கீதா என்பது தெரியவந்தது. இதையடுத்து
போலீசார் அவருடைய மகளுக்கு இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன்,
சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீஸ் முருகநாதன் தகவல்
கொடுத்தனர். அவரது மகள் சங்கவி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் வந்தார். அவருடன் சங்கீதாவை அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தாயாரை பத்திரமாக பார்த்து கொள்ளும்படியும், இனி இவ்வாறு நடக்காமல் இருக்கும்படியும் அறிவுரை
கூறினர்.