கோவையில் இருந்து விமானம் மூலம் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு பறந்த 20 டன் உணவு வகைகள்..!!

கோவை விமானநிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகளுக்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடையே அதிக வரவேற்பு இருப்பது வழக்கம். இதனால் அதிக எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஆண்டு 23 நாட்களில் 20 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது:                                                                          அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே கோவை விமான நிலையத்தில் உள்ள சரக்கக அலுவலகத்தில் இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகள் அதிகளவு சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்ய புக்கிங் செய்யப்பட்டன. முதல் இரண்டு வாரங்களில் வாரம்தோறும் 4.5 டன் எடையிலான இனிப்பு உள்ளிட்ட பல உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டன. மூன்றாவது வாரம் மட்டும் 10 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஷார்ஜா விமானத்தில் மொத்தம் 3 டன், சிங்கப்பூர் விமானத்தில் 7 டன் கொண்டு செல்லப்பட்டன. அக்டோபர் 1-ல் தொடங்கி 23-ந் தேதி வரை இரு நாடுகளுக்கும் மொத்தம் 20 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு பல வகை உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் விளக்கு உள்ளிட்ட தீபாவளியை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பல சிறப்பு வடிவங்களிலான இனிப்பு வகைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.