₹1,000-க்கு மேல் மது வாங்குறீங்களா? இதோ உங்களுக்கான புது ரூல்ஸ்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரே முறையில் ₹1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால், அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டாய நடைமுறை, அடுத்தகட்டமாக வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ₹500 ஆகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் தேவையற்ற சில்லறைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி விற்பனையாகும் பெருமளவிலான ரொக்கப் பணத்தைக் கையாளுவதில் உள்ள சிரமங்கள் மற்றும் பாதுகாப்பற்ற தன்மையைத் தவிர்க்கவும் இது உதவும் என அரசு குறிப்பிட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் ₹1,000 மற்றும் ₹500-க்கு மேல் மது வாங்குவோர் UPI, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் போன்ற மின்னணு முறைகளைப் பயன்படுத்தியே கட்டணம் செலுத்த வேண்டும். இந்த புதிய விதிமுறையின் மூலம், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட்டு, டாஸ்மாக் விற்பனையில் முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.