காட்டுக் காளான்களை உட்கொள்வதால் மனிதர்களின் மனநிலையிலும் பார்வைத் திறனிலும் ஏற்படும் விசித்திரமான மாற்றங்கள் குறித்து, உலகளவில் தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட வகைக் காளானைச் சாப்பிடும்போது கண்கள் முன்னால் குள்ள மனிதர்கள் உலாவுவது போன்ற தோற்றம் ஏற்படும் நிகழ்வுக்கு, ஆராய்ச்சியாளர்கள் தற்போது அறிவியல் பூர்வமான விளக்கத்தை அளித்துள்ளனர்.

கடந்த 1934-ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் சில குறிப்பிட்ட காட்டுக்காளான்களை உண்ட மக்களுக்கு, 3 முதல் 30 சென்டிமீட்டர் வரையிலான சிறிய வண்ணமயமான மனித உருவங்கள் நடமாடுவது போன்ற பிரமை ஏற்பட்டது. இலக்கியங்களில் சொல்லப்படும் ‘லில்லிபுட்’ குள்ள மனிதர்களைப் போல, இந்த உருவங்கள் பொருட்களைத் தாண்டுவது, சுவர்களில் ஏறுவது என நிஜ உலக இயற்பியல் விதிகளுக்கு ஏற்ப இயங்குவது போன்ற தோற்றத்தை மூளையில் உருவாக்கின.

ஆரம்பத்தில் இது வெறும் ‘காளான் பைத்தியம்’ என்றும், உள்ளூர் பழங்குடியினரின் கட்டுக்கதை என்றும் ஒதுக்கப்பட்டது. எல்.எஸ்.டி (LSD) போன்ற போதைப்பொருட்களைக் கண்டறிந்த ஆல்பர்ட் ஹாஃப்மேன் உள்ளிட்ட பல நிபுணர்கள் இதில் ஆய்வு மேற்கொண்டும், இந்த விசித்திர அனுபவத்திற்கான வேதியியல் காரணம் பல தசாப்தங்களாகத் தெரியாமலேயே இருந்தது.சமீபத்தில் யூட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆய்வுக் குழுவினர், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் காட்டுப்பகுதிகளில் கள ஆய்வு நடத்தினர். அங்குள்ள மக்களால் பயன்படுத்தப்பட்ட காளான் மாதிரிகளைச் சேகரித்து ‘டி.என்.ஏ வரிசைமுறை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.அதில், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட இந்த விசித்திரக் காளான்கள் அனைத்துமே ‘லான்மாவோ ஆசியாடிகா’ என்ற ஒரே வகையைச் சேர்ந்தவை என்பது கண்டறியப்பட்டது.மேலும், வழக்கமாகப் போதை அல்லது மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் ‘சைலோசிபின் போன்ற வேதிப்பொருட்கள் இதில் இல்லை என்பதும், மாறாக இதுவரை அறிவியல் உலகம் அறியாத முற்றிலும் புதியதொரு மாயத்தோற்ற வேதிப்பொருள் இதற்குக் காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவ வரலாற்றில், தீவிர நரம்பியல் பாதிப்புகள், டிமென்ஷியா (ஞாபக மறதி நோய்) மற்றும் மதுப்பழக்கத்தை திடீரென நிறுத்துபவர்களுக்கும் இதுபோன்ற குள்ள மனிதர்கள் தெரியும் மாயத்தோற்றங்கள் ஏற்படுவது பதிவாகியுள்ளது.
எனவே, இந்தக் காளானில் உள்ள புதிய வேதிப்பொருளை ஆய்வு செய்வதன் மூலம், மனித மூளை காட்சிகளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் யதார்த்தத்தை எப்படி உணர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எதிர்காலத்தில் இந்த மூலக்கூறுகளைத் தனிமைப்படுத்துவது, மனநல மற்றும் நரம்பியல் சார்ந்த நோய்களுக்குப் புதிய சிகிச்சைகளைக் கண்டறிய வழிவகுக்கும்.
இயற்கையில் விளையும் அனைத்துக் காளான்களும் உண்ணத்தக்கவை அல்ல. சரியாக அடையாளம் காணப்படாத அல்லது முறையாகச் சமைக்கப்படாத காட்டுக்களான்களை உட்கொள்வது நரம்பு மண்டலத்தைப் பாதித்து ஆபத்தான நிலைக்குத் தள்ளும் என்பதால், பொதுமக்கள் காளான்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.






