குறைந்த விலையில் ஒட்​டு மொத்த உலகத்துக்கு மருந்துகளை வழங்குகிறது இந்தியா

மிகக் குறைந்த விலை​யில் ஒட்​டு மொத்த உலகத்துக்கும் இந்தியா மருந்​துகளை வழங்கி வரு​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​காவைச் சேர்ந்த புளூம்​பர்க் நிறு​வனம் நிதிச் சேவை, மென்​பொருள், ஊடகம் என பல்​வேறு துறை​களில் கால் பதித்து உள்​ளது. இந்த நிறு​வனம் சார்​பில் கடந்த 2018-ம் ஆண்​டில் “புளூம்​பர்க் புதிய பொருளா​தார மன்​றம்” உரு​வாக்​கப்​பட்​டது. இந்த மன்றத்​தின் சார்​பில் ஆண்​டு​தோறும் சிறப்பு மாநாடு நடத்தப்படுகிறது. சிங்​கப்​பூர், பெய்​ஜிங் உள்​ளிட்ட நகரங்​களில் மாநாடு நடை​பெறு​வது வழக்​கம். முதல்​முறை​யாக டெல்​லி​யில் புளூம்​பர்க் மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட பொருளா​தார நிபுணர்​கள் பங்​கேற்று உள்​ளனர்.

முதல் நாள் மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: 21-ம் நூற்​றாண்​டில் தொழில்​நுட்​பம், தரவு​கள், அறி​வு, புதுமை கண்டுபிடிப்​பு​கள் ஆகிய​வையே ஒரு நாட்​டின் பலத்தை தீர்மானிக்​கின்​றன. இந்த 4 துறை​களி​லும் இந்​தியா முன்னோடியாக விளங்​கு​கிறது. கடந்த 2014-ம் ஆண்​டுக்கு முன்பு இந்​தி​யா​வில் 100 ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள் மட்​டுமே இருந்​தன. தற்​போது 2.5 லட்​சத்​துக்​கும் அதி​க​மான நிறு​வனங்​கள் செயல்படுகின்​றன. சுமார் 45 சதவீத நிறு​வனங்​களை பெண்​கள் தலைமை ஏற்று நடத்​துகின்​றனர்.

பல்​வேறு சமூகநலத் திட்​டங்​கள் மூலம் நாடு முழு​வதும் 25 கோடி பேரை வறுமைக் கோட்​டில் இருந்து மீட்டு உள்​ளோம். இது மிகப்பெரிய சாதனை ஆகும். மக்​களின் வங்​கிக் கணக்​கு​களுக்கு நேரடி​யாக மானிய நிதி வழங்கப்​படு​கிறது. இன்​றைய உலகத்​தில் புதிது, புதி​தாக பிரச்​சினை​கள் உரு​வாகி வரு​கின்​றன. இதனால் எரிசக்​தி, அரிய​வகை கனிமங்​களுக்கு கடுமை​யான தட்​டுப்​பாடு ஏற்​படு​கிறது. இந்த பிரச்​சினை​களை இந்​தியா திறம்பட சமாளித்து வரு​கிறது.

நாடு முழு​வதும் சூரிய மின் உற்​பத்தி கணிச​மாக அதி​கரித்து வருகிறது. மிகக் குறைந்த விலை​யில் ஒட்​டுமொத்த உலகத்துக்கும் இந்​தியா மருந்​துகளை வழங்கி வரு​கிறது. கரோனா காலத்​தில் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்கு தடுப்பூசிகள், மருந்​துகளை விநி​யோகம் செய்​தோம்.

இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீதத்தை எட்டி உள்ளது. நாட்​டின் அந்​நிய செலாவணி கையிருப்பு 700 பில்​லியன் டால​ராக உள்​ளது. கடந்த கால தவறுகளை திருத்தி பல்​வேறு பொருளா​தார சீர்​திருத்​தங்​களை அமல்​படுத்தி வரு​கிறோம். இதனால் நாட்​டின் பொருளா​தா​ரம் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. செயற்கை நுண்​ணறிவு துறை​யில் இந்​தியா முன்​னோடி​யாக விளங்​கு​கிறது. இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.