டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கோவை மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளங்கள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த சில நாட்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டு வரும் தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தை விட 1 அடி வரை உயரமாக உள்ளது.

துடியலூர் ரயில்வே கேட் மூடப்பட்டு அப்பகுதியில் தண்டாவாளங்கள் புதிதாக மாற்றப்பட்ட நிலையில் அது அங்கு ஏற்கனவே இருந்த தார் சாலையில் இருந்து ஒரு அடி உயரமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பல இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்தனர். மேலும் கார்களின் அடிப்பகுதி தண்டாவாளங்களில் உரசி சேதமடைந்தன. அதேபோல் அதிக பாரத்துடன் வரும் லாரிகள் தண்டவாளங்களை கடக்க முடியாமல் ஆக்சில் உடைந்து பழுதடைந்து அங்கேயே நிற்கின்றன.

இந்த நிலையில் இன்று இரவு 8.45 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் அவ்வழியாக சுமார் 30 டன் எடையுள்ள டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி வந்த சரக்கு லாரி தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது ஆக்சில் உடைந்து அப்படியே தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்று விட்டது.

அந்த நேரம் வந்த நீலகிரி விரைவு ரயிலுக்கு கேட் கீப்பர் உடனடியாக சிகப்பு விளக்கு காண்பிக்கப்பட்டு லாரிக்கு 50 மீட்டர் முன்பாக ரயில் நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக லாரி மீது ரயில் மோதும் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பொது மக்கள் லாரியை தண்டவாளத்தில் இருந்து தள்ளி நகர்த்த முற்பட்டனர் ஆனால் லாரியில் 30 டன் அளவிற்கு சரக்கு இருந்ததால் நகர்த்த முடியவில்லை இதையடுத்து கயிறு கட்டி இழுக்க முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து கிரேன் வர வழைக்கப்பட்டு பெல்ட் மூலம் கட்டி இழுத்தனர் ஆனால் லாரி நகராமல் பெல்ட் கட் ஆனாது.

இதைத் தொடந்து இரும்பு சங்கிலி மற்றும் இரும்பு ரோப் மூலம் கட்டி கிரேன் மூலம் இழுத்தனர். இருந்த போதும் லாரியை நகர்த்த முடியவில்லை இதையடுத்து ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியின் பின்னால் இருந்து தள்ளி விட முன்னாள் கிரேன் இழுத்து தண்டவாளத்தில் இருந்து லாரியை நகர்த்தினர்.

உடனடியாக ரயில்வே கேட் மூடப்பட்டு அங்கி காத்திருந்த நீலகிரி விரைவு ரயில் 1 மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. இந்த லாரி சிக்குவதற்கு சிறிது நேரம் முன்பு இதே போல் ஒரு லாரியின் ஆக்சில் உடைந்தது. அதேபோல் லாரியை நகர்த்திய பின் அவ்வழியாக வந்த அரசு விரைவு சொகுசு பேருந்தும் தண்டவாளத்தில் சிக்கி முன்பக்க படிக்கட்டு உடைந்தது.

எனவே உடனடியாக தண்டவளத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு சாலையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.