கோடீஸ்வர அமைச்சர்… சொந்தமாக 140 கார்கள்.. பாதுகாப்பு அதிகாரியாலேயே சுட்டு கொல்லப்பட்ட நபா கிஷோர் தாஸ்..

புவனேஸ்வர் : ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த அமைச்சர் நபா தாஸ், 140 கார்கள் வைத்திருந்த கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராகவும், பிஜு ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவராகவும் இருப்பவர் நபா கிஷோர் தாஸ்.

தனது சொந்த மாவட்டமான ஜார்சுகுடாவில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக காரில் சென்றார். அமைச்சர் நபா கிஷோர் தாஸ் காரை விட்டு இறங்கியபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர், அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார்.

புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அமைச்சர் நபா தாஸுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் நபா கிஷோர் தாஸ். இவர், ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் குறைதீர்ப்பு அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தார். அப்போது, காரில் இருந்து இறங்கிய நபா தாஸை நோக்கி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ், துப்பாக்கியால் சுட்டார்.

போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மார்பில் குண்டுகள் பாய்ந்து அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சரிந்து கீழே விழுந்தார். 2 போலீஸ் அதிகாரிகள் மீதும் குண்டுகள் பாய்ந்தன. பதற்றமடைந்த பொதுமக்களும் , காவல்துறையினரும் குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அமைச்சர் உட்பட மூவரை மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். நபா தாஸின் மார்பில் குண்டு பாய்ந்ததால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தலைநகரான புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் புவனேஷ்வர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அமைச்சர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அமைச்சரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

நபா கிஷோர் தாஸ் ஜார்சுகுடாவைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்தவர். ஒடிசாவின் டெட்ராய்டாக கருதப்படும் ஜார்சுகுடாவைச் சேர்ந்த நபா தாஸ் ஆரம்ப காலகட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் இருந்தவர். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். சட்டம் படித்தவரான நபா தாஸ், சுரங்கம், போக்குவரத்து தொடர்பான தொழில்களை நடத்தி வந்தார். ஜார்சுகுடா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று 2 முறை வென்று எம்.எல்.ஏ ஆனவர் நபா தாஸ்.

கடந்த 2019ஆம் ஆண்டு திடீரென பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு ரூ.34 கோடி மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தன்னிடமும் தனது மனைவியிடமும் சேர்த்து 145 கார்கள் இருப்பதாகவும், அதில் 80 கார்கள் தன்னுடையது என்றும், 65 கார்கள் தனது மனைவியின் பெயரிலும் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

நபா தாஸ் 145 கார்கள் வைத்திருப்பது பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், “எனது குடும்பத்திற்கு பல தொழில்கள் உள்ளன. என் மகனும் வியாபாரத்தில் இருக்கிறான். நாங்கள் அனைவரும் முறையாக வருமான வரி செலுத்துகிறோம். பிறகு, நாங்கள் பல வாகனங்களை வைத்திருப்பதில் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்பினார் நபா தாஸ். நபா தாஸ், ஒடிசாவின் கோடீஸ்வர அமைச்சர்களில் முன்னணியில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக 2009ல் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ ஆன நபா தாஸ், 2014 தேர்தலிலும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றிருந்தார். 2019இல், பிஜூ ஜனதா தளம் சார்பில் வென்று, நவீன் பட்நாயக் அமைச்சரவையில் முதல் முறையாக இடம் பிடித்தார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திலும் அவர் தனது இலாகாவைத் தக்க வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.