கை கொடுக்காத ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை.. 2 மாநிலங்களிலும் பின்தங்கிய காங்கிரஸ்..?

சிம்லா: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இதனால் குஜராத் மற்றும் இமாசல பிரதேச தேர்தல் வெற்றிக்கு ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை உதவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருமாநில தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகளால் காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும் என தெரிகிறது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இரண்டு மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.

68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்திற்கு கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அதேபோல், குஜராத்தில் கடந்த 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக 89 மற்றும் 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலுமே பாஜக ஆட்சிதான் உள்ளது. இதனால், இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

இதன்படி, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜாரத்தில் பாஜக எந்த சிக்கலும் இன்றி ஆட்சியை தக்க வைத்துவிடும் என்பதை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. குஜராத்தில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதுவரை இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் இந்த எண்ணிக்கையை பாஜக சர்வ சாதாரணமாக கடந்து விடும் என்றே சொல்கின்றன.

இதனால், குஜராத்தில் எளிதாக அந்தக் கட்சி ஆட்சி அமைத்து விடும் என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைக்கும் போல் தெரிகிறது. அதேவேளையில் ஆம் ஆத்மி குஜராத்தில் தனது தடத்தை பதிவு செய்துவிடும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுவதும் முக்கியமாக பார்க்க வேண்டியது. பாஜக குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தொடர்ந்து பிடித்து சாதனை பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கடும் போட்டி அளிக்கும் என்றாலும் பாஜக ஆட்சி அமையவே வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு கடும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே அமைந்து இருக்கிறது. ஏனெனில், காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்த நிலையில், கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக கட்சித்தலைமை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

காந்தி குடும்பத்தை சாராத தலைவராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு கார்கே வெற்றி பெற்றார். அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி முதல் தேர்தல் இதுவாகும். இதுஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடுமுழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார். சுமார் 3 மாதங்களுக்கு மேலாக அவரது யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராகுல் காந்திக்கு வழி நெடுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

பாரத் ஜோடோ யாத்திரை குஜராத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே பிந்தைய கருத்துக்கணிப்புகள் அமைந்துள்ளன. தலைமை மாற்றம், பாரத் ஜோடோ யாத்திரை என அடுத்தடுத்த அதிரடிகளுக்கும் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.