2668 அடி உயரம் கொண்ட மலை மீது இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. அதற்கு பக்தர்களுக்கு மலை ஏறுவதற்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான 06.12.2022 இன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.
திருக்கார்த்திகை காலை 06.00 மணி முதல் முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மட்டுமே முதல் முதலில் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி வழங்கப்படும்.
இன்று காலை 06.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம், செங்கம் சாலை, கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.
இந்த அனுமதி சீட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக (Queue System) அனுமதி சீட்டு மேற்குறிப்பிட்ட சிறப்பு மையத்தில் வழங்கப்படும். மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
பக்தர்கள் பகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.
பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப் படுவார்கள். மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும்.
மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.
Leave a Reply