மக்களவை தேர்தலுக்கு முன்னும் பின்னும்… 10 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடையும்..!

மக்களவை தேர்தலுக்கு முன்பும் தேர்தல் சமயத்திலும் 10 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

பிரதமர் மோடி உள்ளிட்ட் பாஜக தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. அப்போது ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்ட மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளதால் அதனுடன் சேர்த்து, மக்களவை தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மக்களவை தேர்தல் நடக்க வேண்டிய நேரத்தில் 4 மாநிலங்களின் சட்டசபைகளும், அதன்பிறகு ஜார்கண்ட் மாநிலச் சட்டசபையும் பதவிக் காலத்தை நிறைவு செய்கின்றன.

இவ்வாறு மக்களவை தேர்தலுக்கு முன்னும், தேர்தல் சமயத்திலும் 10 மாநிலச் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் இந்த மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் மக்களவை தேர்தலுடன் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..