தந்தை பெரியார் என பெயர் வைத்ததால் உணவகத்தை அடித்து நொறுக்கிய கும்பல்: தாய்,மகன் படுகாயம- 5 பேர் கைது – இருவர் தலைமறைவு.!

மேட்டுப்பாளையம் அருகே காரமடை டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன்
(வயது 54). இவர் கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில் தந்தை பெரியார்
உணவகம் என்ற பெயரில் இன்று கடை திறப்பதற்காக நேற்று முதல் கடையில்
பணியாற்றி வந்தனர்.
உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த நாகராணி (வயது 38). இவரது மகன் அருண்
(20). ஆகியோர் வேலை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அங்கு வந்த
சிக்கரம்பாளையம் காளட்டியூர் பகுதியை சேர்ந்த ரவிபாரதி (39), காரமடை
காந்தி மைதானம் பகுதியை சேர்ந்த பிரபு (27), தொட்டிபாளையம் பகுதியை
சேர்ந்த சுனில் என்கிற சதீஷ்குமார் (32), பெரிய வடவள்ளி பகுதியை சேர்ந்த
சரவணக்குமார் (30), மங்களகரை புதூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (26)
உள்பட 7 பேர் உணவகத்தில் நுழைந்தனர். அவர்கள் இந்து அமைப்புகளுக்கு எதிராக பெரியார் செயல்பட்டவர். காரமடை சுற்றுவட்டார பகுதி இந்து அமைப்புகளுக்கான கோட்டையாக உள்ளது. ஆகவே இப்பகுதியில் தந்தை பெரியார் என்ற பெயரில் உணவகம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நாகராணி, அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 7 பேரும் சேர்ந்து நாகராணி, அருணை சரமாரியாக தாக்கினர். இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு காரமடை கண்ணார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதில் அருணுக்கு 38 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து காரமடை
போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார்
வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை தாக்கி உணவகத்தை சேதப்படுத்திய 5 பேரை
கைது செய்துள்ளனர். தலைமறைவான மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி
வருகின்றனர்.