திவாலாகும் பாகிஸ்தான்?” கழுத்தை இறுக்கும் பொருளாதார நெருக்கடி… நிதி இல்லாமல் தவிக்கும் அரசு துறைகள்..!

டெல்லி: கொரோனாவுக்கு பின்னர் பெரும்பாலான நாடுகளின் பொருளாதார நிலை சுமுகமாக இல்லை. அதற்கு ஒரு உதாரணம் இலங்கை.

கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகவே சரிந்துவிட்டது. ஆனால், அது இலங்கையுடன் முடிந்துவிடவில்லை. வேறு பல நாடுகளும் இலங்கையைப் போலவே பெரும் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.. அப்படித்தான் பாகிஸ்தானிலும் இப்போது வரிசையாகப் பல பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் பொருளாதார ரீதியாக இப்போது மிகவும் இக்கட்டான ஒரு சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு இப்போது உலக நாடுகளின் உதவி தேவைப்படுகிறது.. இதனால் அவர்கள் இந்தியா உடனான பேச்சுவார்த்தையைத் தொடங்க சில முயற்சிகளை எடுத்தனர்.

இருப்பினும், இதுவரை அதற்குப் பலனில்லை.. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு பேச்சுவார்த்தை மற்றும் சுமுகமான உறவைப் பார்த்துக் கொள்ளலாம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ள நிலையில், அந்நாட்டின் முன்னுரிமை எப்படியாவது நிதி நிலைமையைச் சமாளிக்கக் கடன் பெற வேண்டும் என்பதே ஆகும். சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் கடன் கேட்ட நிலையில், அதற்குச் சர்வதேச நிதியம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால் இப்போது பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் திரும்பியுள்ளது. தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த நாணய நிதியத்தைக் கேட்டுக்கொள்ளுமாறு பாகிஸ்தான் வலியுறுத்துகிறது. மின் கட்டணத்தை உயர்த்தி வேண்டும் வரியை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைச் சர்வதேச நிதியம் கடன் வழங்க விதிக்கிறது.

ஆனால், இப்படி திடீரென அடுத்தடுத்து கடும் நடவடிக்கையை எடுத்தால் அது அரசியல் ரீதியாக தற்போதைய பிரதமர் ஷெரீப்பிற்கு பேரழிவாக இருக்கும் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. இதன் காரணமாகவே கட்டுப்பாடுகளைத் தளர்த்தச் சொல்லிக் கேட்கிறது. பாகிஸ்தானின் நிதி நிலை மோசமாக இருப்பது மட்டுமில்லை… இந்த நிலையை எப்படி மாற்ற வேண்டும் என்ற யோசனை கூட பாகிஸ்தானிடம் இல்லை. பொருளாதார பிரச்சினை மட்டுமின்றி சமூக ஒற்றுமை, தாலிபான்களின் வளர்ச்சி, பாதுகாப்பற்ற சூழல் என்று எல்லா பக்கத்திலும் இருந்தும் பாகிஸ்தான் இப்போது பெரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

பாகிஸ்தானின் பிரச்சினைகள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் இப்போது விழுந்தால் உலகத்திற்கே பிரச்சினை வரும் என்பதால் உலக நாடுகள் அதை அனுமதிக்காது என்றும் தங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள் என்றும் பாகிஸ்தான் நினைத்தது. இருப்பினும், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவப் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. இருந்த போதிலும், பாகிஸ்தான் மக்கள் இது குறித்து பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியைக் காட்டிலும் அங்கு நடக்கும் அரசியலுக்கே மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் அங்கு தற்போதைய அரசுக்கும் நிலையான ஆதரவு இல்லை என்றே சொல்லலாம்.

பாகிஸ்தான் வளங்களை இத்தனை காலம் சுரண்டிய அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் இப்போது திவால் நிலைக்கு நாட்டை எடுத்துச் சென்றுள்ளனர். நாடு திவால் ஆனால் இது மிகப் பெரிய போராட்டம் மற்றும் அரசியல் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதன் காரணமாகவே ஏதேதோ காரணத்தைச் சொல்லி உலக நாடுகளிடம் இருந்து கடனை பெற முயல்கிறார்கள். நாடு அடிப்படைவாதிகளிடம் சிக்கினால், நாட்டின் அணு ஆயுதங்களும் பயங்கரவாதிகளின் கைகளுக்குச் செல்லும் என்றும் இதைத் தடுக்க உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று அவர்கள் உலக நாடுகளைப் பார்த்துக் கேட்கிறார்கள்.

சர்வதேச நிதியம் அவர்களுக்கு உதவ ஒரு திட்டத்தை வகுத்தாலும் கூட அது சில மாதங்கள் மட்டுமே நீட்டிக்கும். பாகிஸ்தானுக்கு அடுத்த ஆறு மாதங்களில் சுமார் $10 பில்லியன் தேவைப்படுகிறது. சர்வதேச நிதியத்தின் திட்டத்தின் மூலம், சவூதி சுமார் $2 பில்லியன், ஐக்கிய அமீரகம் $1 பில்லியன், சீனா 2 பில்லியன், கத்தார் $2 பில்லியன் வழங்கும். ஆனால், இவை வரும் ஜூலை மட்டுமே நிலைமையைச் சமாளிக்க உதவும். அடுத்த நிதியாண்டில் நிலைமையைச் சமாளிக்க பாகிஸ்தானுக்கு மேலும் 30 பில்லியன் டாலர் தேவைப்படும். ஆனால், இப்படி பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து உலக நாடுகள் பணத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கத் தயாராக இல்லை. இதனால் தான் சர்வதேச நிதியம் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

ஆனால், சர்வதேச நிதியம் விதிக்கும் கட்டுப்பாடுகளை அது பாகிஸ்தான் மக்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நிச்சயம் பணவீக்கம் 40-50% வரை உயரும். .ஏனெனில் எரிபொருள் விலை, மின் கட்டணங்கள், எரிவாயு விலை உள்ளிட்டவற்றை உயர்த்த சர்வதேச நிதியம் வலியுறுத்துகிறது. மேலும், பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பும் கடுமையாகச் சரியும். இப்போது ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 240 என்ற அளவில் உள்ள நிலையில், அது 300 ரூபாய் வரை போகலாம். இது பாகிஸ்தானின் நிலைமையை மிகவும் மோசமான ஒன்றாகவே மாற்றும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, பாகிஸ்தான் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும். இருப்பினும், வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தினால் அங்கு இப்போதிருக்கும் ஓரிரு பிஸ்னஸும் நடையைக் கட்ட வேண்டியது தான். தற்போது அங்கு 17% வட்டி இருக்கும் நிலையில், இந்த அதிக வட்டி விகிதத்தில் கூட, பாக். அரசின் மொத்த வருவாயைக் காட்டிலும் கடன் செலவு அதிகமாக உள்ளது. பாகிஸ்தான் திவால் ஆவதில் இருந்து கப்ப முடியாது என்பதே கசப்பான உண்மை. திவால் ஆகுமா என்பது கேள்வி இல்லை.. எப்போது திவால் ஆகும் என்பதே ஒரே கேள்வியாகும்.

இப்போது கடனை மறுசீரமைக்க வேண்டும் என்று கோருவதே ஒரே ஆப்ஷன். இருப்பினும், அதுவும் கூட கடினமான ஒன்றாகவே இருக்கும். மின் கட்டணம், வரி உள்ளிட்டவற்றை உயர்த்த வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடுகள் உடனே இந்த கடன் மறுசீரமைப்பும் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், இதுவும் தற்காலிக தீர்வாகவே இருக்கும். ஏனென்றால், அங்குள்ள உயர்த்தட்டு அரசியல்வாதிகள் தங்கள் சொகுசு வாழ்க்கையை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அதேபோல பாகிஸ்தான் ராணுவமும் தனது செலவைக் குறைக்க ரெடியாக இல்லை. அவர்கள் தொடர்ந்து அதிநவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்தே வருகிறார்கள். இதை எல்லாம் குறைத்தால் தான் இயல்பு நிலைக்குத் திரும்புவது அவர்களுக்கு வாய்ப்புள்ளது.

இருப்பினும், பாகிஸ்தான் இதற்கு ரெடியாக இல்லை. தற்போதைய நிலையை வைத்துப் பார்த்தால்.. பாகிஸ்தான் வேறு வழியில்லாமல் சர்வதேச நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தையே நாடும் எனத் தெரிகிறது. இருந்தாலும், அங்கு விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க அந்நாட்டு அரசு மீண்டும் சலுகைகளை அள்ளிவிடத் தொடங்கும். அதாவது சில மாதங்களில் தேர்தலுக்குப் பிறகு, அப்போது இருக்கும் அரசுக்கு மிகப் பெரிய தலைவலி இருக்கும். அதாவது என்ன நடந்தாலும் கூட பாகிஸ்தான் பொருளாதாரம் வரும் காலங்களில் மோசமடையவே வாய்ப்புகள் அதிகம்.