வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து புது வீடு வாங்கிய பலே கில்லாடி வாலிபர்..!

திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் மந்திரி பாளையம், மகாகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சூலூரில் வசித்து வந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் தான் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். தான் நினைத்தால் தமிழக முதல்வரின் வீட்டுமனை திட்டம் மற்றும் பாரத பிரதமரின் வீட்டுமனை திட்டம் ஆகியவற்றில் வீட்டுமனைகளை பெற்று தர முடியும் என்று கூறி அதற்காக கொஞ்சம் செலவாகும் என்றும் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பி சூலூர் மற்றும் இருகூர், காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 29 நபர்கள் கடந்த இரண்டு வருடங்களாக வினோத்திடம் ரூபாய் 77 லட்சத்தை கொடுத்துள்ளனர். 77 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட வினோத், 29 நபர்களுக்கும் இருகூர், வடவள்ளி, வெள்ளலூர், சூலூர் ஆகிய இடங்களில் வீட்டுமனைகள் ஒதுக்கி இருப்பதாக கூறி தமிழக முதலமைச்சரின் படம் பொறித்த டோக்கன்கள் மற்றும் புகைப்படம் ஒட்டிய வீட்டுமனை பட்டா ஆகியவற்றை பணம் பெற்றவர்களிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து வீட்டு மனை பட்டாக்களுக்கு உரிய இடத்தை அளந்து கொடுப்பதாக கூறி அவர்களிடம், இவர் கொடுத்த டோக்கன்கள் மற்றும் வீட்டுமனை பட்டாக்களை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார். இருந்தாலும் ஒரு சிலர் இவர் கொடுத்த டோக்கன்களையும், வீட்டுமனை பட்டாக்களையும் தங்களது செல்போன்களிலும், ஜெராக்ஸ்ம் எடுத்து வைத்துள்ளனர். வினோத் இடம் அளந்து கொடுப்பதாக கூறி ஆவணங்களை பெற்று சென்ற பிறகு தலைமறைவாகி விட்டதால், 77 லட்சத்தை இழந்த 29 நபர்களும் இதுகுறித்து தாசில்தார் அலுவலகம் சென்று கேட்கும்போது வினோத் கொடுத்த அனைத்து ஆவணங்களும் போலியானவை என்றும், அந்த நபர் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த 29 நபர்களும் கடந்த மூன்று மாதங்களாக வினோத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் பலே கில்லாடி வினோத் பொதுமக்களிடம் ஏமாற்றிய 77 லட்சத்தை வைத்து திருப்பூர் மாவட்டம், கேத்தனூர் மந்திரிபாளையத்தில் புதிதாக வீடு ஒன்றை வாங்கி தனது குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருந்துள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் வினோத்தை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் வருவதை அறிந்த வினோத் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

வினோத்தின் வீடு

இதுகுறித்து வினோத்தின் தாய் செல்வி, தங்கை ராஜேஸ்வரி, மைத்துனர் மணிகண்டன் ஆகியோரிடம் கேட்டபோது வினோத்திற்கும் எங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்து வீட்டினரிடம் விசாரிக்கும் போது இதே போல பல இடங்களிலும் வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததும், அவர் மீது சூலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு இருப்பதும் தெரிய வந்தது.

மேலும், இவர்களிடம் சென்று பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பணத்தை கேட்டால் தங்களை ஜாதியை கூறி திட்டியதாக கூறி வழக்கு போட்டு விடுவதாகும் மிரட்டுகின்றனர் வினோத்தின் குடும்பத்தினர். இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் என்ற பழமொழிக்கு வினோத் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளான். எனவே இது போன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய புகாரில் தெரிவித்துள்ளனர்.