ஆன்லைன் மூலம் பண மோசடியா… உடனே இந்த நம்பர்க்கு புகார் அளிக்கலாம்-சைபர் கிரைம் போலீஸ் அதிரடி.!!

இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது. அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி அவர் ரூபாய் 2 லட்சம் பணத்தை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் தன்னை ஏமாற்றியதை அறிந்து கொண்ட ராமகிருஷ்ண பிரபு கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமகிருஷ்ண பிரபுவை ஏமாற்றிய நபரை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1 1/2 லட்சம் பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

இதைப்போன்று ராதாகிருஷ்ணன் என்பவர் தனது கைபேசிக்கு வந்த ஒரு மெசேஜை நம்பி தனது ஏடி.எம் கார்டு விவரத்தை அதில் பதிவு செய்துள்ளார். அதன்பின் அவரின் ஏடி.எம் கார்டில் இருந்த ரூபாய் 1,25,000 பணத்தை மர்ம நபர்கள் அபகரித்துள்ளனர். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த மர்ம நபரை கண்டுபிடித்து அவரிடம் இருந்த 1,25,000 ரூபாய் பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் ஸ்ரீ தீபா என்பவர் தனது போனில் உள்ள நெட் பேங்க் மூலமாக வேறு ஒருவருக்கு தெரியாமல் பணம் அனுப்பியுள்ளார். இது குறித்து இவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த முகம் தெரியாத நபரிடம் இருந்து ஸ்ரீ தீபாவின் பணம் 1,00,000 ரூபாயை மீட்டுக் கொடுத்துள்ளது. இதேபோல் மத்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் எஸ்தர் ராணி என்பவர் தனது போனில் உள்ள போன் பே மூலமாக பணத்தை பறி கொடுத்துள்ளார். இது குறித்து இவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து அவருடைய பணம் 30 ஆயிரத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

இதேபோன்று துடியலூர் நல்லாம்பாளையத்தில் வசிக்கும் ரவிக்குமார் என்பவரின் கைப்பேசிக்கு வங்கிகடன் பெற்றுத் தருவதாக கூறி ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜை நம்பி இவர் 19,500 ரூபாய் பணத்தை பறி கொடுத்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ரவிக்குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பணத்தை ஏமாற்றிய மர்ம நபர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தங்களுடைய கைப்பேசிகளுக்கு வரும் எந்த ஒரு அழைப்பையும் மெசேஜையும் நம்பி பொதுமக்கள் யாரும் பணம் கட்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 1930 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் கூறியுள்ளனர்.