வக்கீல் படை களமிறங்கியும் முயற்சி தோல்வி.. ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி.. எந்நேரமும் கைது ஆகலாம்.!

சென்னை : பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து முன்னணி பிரமுகர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கனல் கண்ணனின் கோரிக்கையை நிராகரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், விரைவில் கனல் கண்ணன் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், பிரபல சினிமா ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

கனல் கண்ணனின் இந்தப் பேச்சு தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்தார்.

கனல் கண்ணன் தாக்கல் செய்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டும் எனப் பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.

சிலையில் இருந்த வாசகங்கள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். கோவிலின் முன் அந்தச் சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தனது முன் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக இந்து மத கடவுள்களுக்கு எதிராக பல வீடியோக்கள் பதிவிடப்படுவதாகவும், அவை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

கனல் கண்ணன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், கனல் கண்ணன் தரப்பில் இருந்து இந்து முன்னணி சார்பாக 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் களமிறங்கினர். இவர்களின் ஆலோசனைப்படி இன்று நீதிமன்றத்தில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

இந்த வழக்கில், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடையலாம் என்றும் எந்த நேரத்திலும் கனல் கண்ணன் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.