சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது சரியல்ல.. அது ஜனநாயகத்திற்கு புறம்பானது.. அமைச்சர் துரைமுருகன் பேட்டி.!

வேலூர்: தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட அழுத்தம் கொடுக்கப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை தடுக்கும் வகையில் மாணவர்கள் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வேலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், வருங்கால தலைமுறையினரை பாதுகாக்க, போதைப்பொருள் தடுப்பு பணிக்காக கட்சிப் பாகுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சில சமூக விரோதிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

போதைப் பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதை தடுக்கவும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காவல்துறையினர் போதைப்பொருட்களை முழுவதுமாக தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி – நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு வெளியே சொல்ல முடியாத அரசியல். தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்க கூடாது. சட்டமன்றத்தில் ஒரு முறைக்கு, இருமுறை நிறைவேற்றிய மசோதாக்களை வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு புறம்பானது. அவர் தன்னை மற்றும் சட்டத்தை உணர்ந்து நீட் தேர்வு உள்ளிட்ட மசோதாக்களில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

தமிழக அரசின் மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநருக்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாலாற்றில் தற்போது தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். மேல்அரசம்பட்டில் அணை கட்டுவதற்கு அடுத்தாண்டு நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.